நெல்லை மாவட்டத்தில் இரு கரோனா சிகிச்சை மையங்கள்: முதல்வர் தொடக்கிவைத்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, வள்ளியூர் ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் உள்ள புனித அந்தோணியார் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 140 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் மற்றும் வள்ளியூரில் உள்ள யுனிவர்சல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 180 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

இதன்மூலம், கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டார மக்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி மற்றும் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலைமாறி, இனி அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்புதிய கரோனா சிகிச்சை மையங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் அருகில் உள்ள திசையன்விளை மற்றும் வடக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படும்.

.இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலியிலிருந்து சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் சா. ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரூபி ஆர். மனோகரன், எம். அப்துல் வகாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆர். ஆவுடையப்பன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வி. விஷ்ணு, இ.ஆ.ப., ஆகியோரும், தலைமைச் செயலகத்திலிருந்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial