அடிப்படை வசதிகள் கோரி கரோனா வார்டுகளில் பணியாற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கரோனா வார்டுகளில் பணியாற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டுகளில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு, வாரந்தோறும் சுமார் 37-க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி மருத்துவ மாணவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். மேலும், எங்களில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.

இந்நிலையில், கரோனா வார்டுகளில் பணியாற்றிய மற்றும் தொற்று ஏற்பட்ட மாணவர்கள் ஆகியோருக்கு தனிமைப்படுத்துவதற்கு எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை. இங்கு அனைவரும் ஒரே விடுதியில் தங்கியிருக்கிறோம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி அனைத்தும் பொதுவாக இருப்பதால் கரோனா தொற்று அனைத்து மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கரோனா வார்டுகளில் பணியாற்றுபவர்களுக்கு தனித்தனி அறைகளையும், கரோனா தொற்று கண்டறியப்படும் மாணவர்களுக்கு தனி வார்டுகளும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தீவிர கண்காணிப்பு பிரிவுகளில் பணியாற்றும் கரோனா தொற்று பரவாத மருத்துவர்களுக்கு, கையுறை, முககவசம், கவச உடை ஆகியவை தட்டுப்பாடு இன்றி போதிய அளவு வழங்க வேண்டும். கரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்பை உண்டாக்கி வரும் இந்நேரத்தில், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானதாகும். தற்போது, எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை வார்டில், சுகாதாரமாக இல்லை. எனவே, எங்ளுக்கு சத்தான ஆகாரம், குடிநீர், சுத்தமான கழிவறை, தங்குதடையற்ற மருந்து வசதி, தொடர் பரிசோதனை வசதி ஆகியவற்றுடன் கூடிய தனி வார்டு ஒதுக்கித்தர கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial