தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருந்துறை வழியாக நேற்று ஈரோடு சென்றார். பெருந்துறை அண்ணா சிலை அருகே முதல்வருக்கு சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்வை செய்தி சேகரிப்பதற்காக தினகரன் நாளிதழின் பெருந்துறை தாலுகா செய்தியாளர் சிவராஜ், மற்றொரு செய்தியாளருடன் அந்த பகுதியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
500 மீட்டர் தூரத்தில் அவரது இருசக்கர வாகனத்தை காவல் பணியில் இருந்த அ.பிரின்ஸ் ராயப்பன்(1916) தடுத்துள்ளார். அப்போது, தான் தினகரன் நிருபர் என்றும், முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியை படம் எடுக்க செல்லவேண்டும் எனக் கூறிய சிவராஜ், தனது அடையாள அட்டையைக் காட்டியும் விட முடியாது’ என அவரிடம் கூற நிருபர்கள் இருவரும் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு நடந்துள்ளார்.
அப்போது காவலர் பிரின்ஸ் ராயப்பன், ‘நான் சொல்ல சொல்ல கேட்காமல் வண்டியை எடுக்கிறாயா… என ஆவேசமாகப் பேசியவாறு தினகரன் நிருபர் சிவராஜ் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். பின்னர் அவரது கையால் வைத்திருந்த குடையால் நிருபர் முகத்தில் குத்தியுள்ளார்.
இதில், அவரது முகத்தில் அணிந்திருந்த கண்ணாடி உடைந்தது. நிலைகுலைந்து போன நிருபர் பாதுகாப்பு தேடி பொதுமக்கள் இருக்கும் பகுதியில் தஞ்சமடைந்துள்ளார் (இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
இதற்கிடையில் அங்கு வந்த பெருந்துறை காவல் ஆய்வாளர் சரவணன், சம்பவ இடத்திற்கு வந்து சிவராஜ் மற்றும் ,காவலர் பிரின்ஸ் ராயப்பனையும் காவல் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பத்திரிகையாளரை தாக்கிய காவலர் பிரின்ஸ் ராயப்பன் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசனைச் சந்தித்து முறையிட்டனர்.
நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் , தினகரன் நிருபர் சிவராஜைத் தாக்கிய ஏட்டு பிரின்ஸ் ராயப்பனை, ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் பத்திரிகையாளரை தாக்கிய காவலர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது என மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.